மத்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்த நிலையில் உட்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது.
இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத்திட்டத்தை இன்று (01) தாக்கல் செய்தார்.
இது அவர் தாக்கல் செய்யும் 9-வது வரவு செலவுத்திட்டம் ஆகும்.
“வளர்ச்சியடைந்த பாரதம்” என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம் என்றும் கூறினார்.





