நடிகர் விஜய்யின் மேடைப் பேச்சு! தமிழக அரசியலில் எழுந்துள்ள சர்ச்சை
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பேசுபொருளாகியுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாணவர் பாராட்டுவிழாவில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தமிழ் நாட்டின் அரசியல் மேடையில் பேசுபொருளாகியுள்ளன.
அத்துடன் தி.மு.க. அரசுடன் தொடர்ந்தும் முரண்பட்டுவரும் தமிழ் நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியையும் நடிகர் விஜய் மறைமுகமாக சீண்டியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நேற்றுமுன்தினம் வெளியிட்ட கருத்துக்கள் பாரிய அளவான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் எனவும் புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் உரை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்திய மார்க்ஸிட் கமியூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு வெங்கடேசன், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் பெயர்களை ஆளுநர் சட்டமன்றத்தில் உச்சரிக்க மறுத்திருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் தனது கல்வி விழாவில் இவர்கள் மூவரைப் பற்றியும் படிக்கச் சொல்லியுள்ளார் திரைக்கலைஞர் விஜய் எனவும் ஆளுநரை காலம் மாற்றும், பேரறிவை நூல்கள் ஊட்டும் எனவும் சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளமை சர்ச்சையாகியுள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே தாம் அரசியலுக்கு வந்தவர்கள் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமக்கு இடையேயான பந்தம் அண்ணன் – தம்பி மாத்திரமே எனவும் தாம் பேசுவதை தான் தம்பி பேசியிருக்கிறார் என்பது தமக்கு வலிமை சேர்க்கும் எனவும் தமக்கான வாக்கை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது எனவும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடிகர் விஜய் கல்வித் துறையில் மாணவர்களுக்கு பயன் தரக்கூடியதை செய்வது பாராட்டக்குரியது எனவும் வரவேற்கக் கூடியதும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கூறும் நல்ல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் நாட்டு ஆளுநர் சாதாரண மக்கள் நிலையை பிரதிபலித்து வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.