இலங்கை முழுவதும் அதிரடி நடவடிக்கை – சுற்றி வளைக்க தயாராகும் பொலிஸார்
நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வலையமைப்புகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் கோட்டாஸின் 373 சமூக பொலிஸ் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் வகையில் அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற செயலமர்வில் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் தொடர்பு கொண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இந்த விசேட நடவடிக்கையில், தமது பொலிஸ் எல்லைக்குட்பட்ட அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் கைது செய்து போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைக் கண்டறிந்து அவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவது பொலிஸ் ஆணையாளர்களின் பொறுப்பாகும்.
அவ்வாறு செய்யாத உத்தியோகத்தர்கள் மீது அந்தஸ்து பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை எதிர்த்துப் போராடுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விமான நிலையத்தின் வெளியேறும் மற்றும் நுழைவு முனையங்களில் தலா எட்டு கமராக்களை பொருத்துவதன் மூலம் நபர்களின் முகத்தை அடிப்படையாக கொண்டு அவர்களின் அடையாள தகவல்களை சரிபார்க்க முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.