அமெரிக்காவில் டிக்டாக் அணுகல் முடக்கப்படும்: நிறுவனம் தகவல்
தடையை அகற்ற கடைசி நேரத்தில் அமெரிக்க அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுக்காவிடில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) முதல் அந்நாட்டில் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளப் போவதாக முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றான டிக்டாக் தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகையும் அமெரிக்க நீதித்துறையும் சேவை வழங்குநர்களுக்குப் போதிய தெளிவையும் உறுதியையும் அளிக்கத் தவறிவிட்டதாக வெள்ளிக்கிழமை அந்த ஊடகம் ஓர் அறிக்கை வழியாகக் கூறியது.
டிக்டாக் ஊடகம் சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது.அந்தச் சமூக ஊடகத்தை ஞாயிற்றுக்கிழமைக்குள் விற்காவிடில், அமெரிக்காவில் அச்செயலிக்குத் தடை விதிக்கப்படும் எனச் சட்டம் இயற்றப்பட்டது. அதனை அமெரிக்க உச்ச நீதிமன்றமும் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
காணொளிச் சமூக ஊடகமான டிக்டாக்கிற்கு அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்காதிருக்க வேண்டுமெனில், அதனை நடுநிலையாகச் செயல்படும் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 2024 ஏப்ரலில் அச்சட்டம் இயற்றப்பட்டது.அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்ற டிக்டாக், அமெரிக்காவிலுள்ள தனது 170 மில்லியன் பயனர்களின் பேச்சுரிமையை அது மீறுவதாக உள்ளது என வாதிட்டது.
முன்னதாக, டிக்டாக் செயலியை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்துள்ளவர்களுக்குப் பாதிப்பிராது எனக் கருதப்பட்டது.ஆனால், உச்ச நீதிமன்றமும் அத்தடையை உறுதிசெய்துவிட்டதால், அமெரிக்காவில் டிக்டாக் செயலி செயலியகங்களிலிருந்து நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், அமெரிக்காவில் டிக்டாக்கை இப்போது பயன்படுத்தி வருவோரும் இனி அதனைப் பயன்படுத்த முடியாமல் போகலாம் எனச் சொல்லப்படுகிறது.இதனையடுத்து, அச்செயலிக்கு விடைகொடுக்கும் வகையில் பலரும் காணொளிகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், இன்னொரு சீனக் காணொளிச் செயலியான ‘ரெட் நோட்’ வழியாகத் தாங்கள் தொடர்ந்து காணொளிகளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
டிக் டாக் செயலியானது அமெரிக்காவில் 7,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இனி அது அங்கு இயங்க முடியாமல் போனால் அவர்களின் நிலை என்னவாகும் எனத் தெரியவில்லை