இந்தியாவில் கிரிக்கெட் பந்திற்காக ஆசிரியர் ஒருவரை கத்தியால் தாக்கிய இளைஞன்

கிரிக்கெட் பந்துக்காக ஆசிரியர் ஒருவரை இளையர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், பாகல்கோட்டெ மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 13) இச்சம்பவம் நிகழ்ந்தது.
கிரிக்கெட் விளையாடியபோது பந்து அருகிலிருந்த ராமப்ப பூஜாரி என்பவருக்கு வீட்டிற்குள் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. 36 வயதான பூஜாரி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
பந்தை எடுப்பதற்காக பவன் ஜாதவ் என்ற 21 வயது இளைஞன் பூஜாரியின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, பந்து வீட்டிற்குள் விழவில்லை என்று அவரிடம் பூஜாரி சொன்னதாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அப்போது, பவன் பூஜாரியைத் தாக்கியதோடு, உடைந்த போத்தலாலும் கத்தியாலும் அவரைக் குத்தினார்.
இதனால், முகத்திலும் தலையிலும் காயமடைந்த பூஜாரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஆசிரியரைப் பவன் தாக்குவது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அக்காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பவன்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதா, அவர் கைதுசெய்யப்பட்டாரா என்ற விவரம் தெரியவில்லை.