லாவோசில் விஷம் கலந்த மதுபானம் அருந்திய ஆஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் மரணம்!
லாவோசில் நஞ்சு கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதுபானத்தை அருந்திய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இன்னொரு பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் இத்தகவலை வெளியிட்டார்.
லாவோசின் நகரம் ஒன்றில் நஞ்சு கலந்ததாகச் சந்தேகிக்கப்படும் மதுபானத்தை அருந்தி டென்மார்க்கைச் சேர்ந்த இருவர், அமெரிக்கர் ஒருவர் ஆகியோரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாவோசில், குறைந்த செலவில் அடிப்படை வசதிகளுடன் மட்டும் சுற்றுலா மேற்கொள்ளும் ‘பேக்பேக்கர்ஸ்’ சுற்றுப்பயணிகளுக்கிடையே அந்நகரம் பிரபலமானது.
பியாங்கா ஜோன்ஸ் எனும் பெண் உயிரிழந்ததாகவும் அவரின் தோழியான ஹோலி பெளல்ஸ் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடி வருவதாகவும் அல்பனீஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்பெண்கள் இருவருக்கும் வயது 19.
பெளல்சுக்கு ‘லைஃப் சப்போர்ட்’ எனப்படும் உயிரூட்டு முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரின் தந்தை ஆஸ்திரேலியாவின் ‘நைன் நியூஸ்’ ஊடகத்திடம் சொன்னார்.
இம்மாதம் 12ஆம் திகதியன்று லாவோசின் வாங் வியேங் நகரில் இரவு வேளை வெளியில் பொழுதைக் கழித்த பிறகு 12 சுற்றுப்பயணிகள் நோய்வாய்ப்பட்டதாக பிரிட்டிஷ், ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
டென்மார்க்கைச் சேர்ந்த இருவர் லாவோசில் உயிரிழந்ததாக அந்நாட்டின் ‘எக்ஸ்ட்ரா பிலாடெட்’ செய்தித்தாள் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 19) தெரிவித்தது. டென்மார்க் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட தகவலை அந்த செய்தித்தாள் மேற்கோள்காட்டியது. மேல்விவரம் ஏதும் வழங்கப்படவில்லை.
வாங் வியேங்கில் தனது நாட்டவர் ஒருவர் உயிரிழந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது. நிலைமையைத் தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அரசதந்திர ரீதியாக ஆதரவளித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. உயிரிழந்த திகதி, மரணத்துக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணம் போன்ற விவரங்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சு வழங்கவில்லை.