பருவநிலை வரம்பு நிலைகளை மீறி இயங்கும் உலகம் – விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கை
பூமியில் வாழ்வதற்கு அவசியமான 5 முக்கிய பருவநிலை வரம்பு நிலைகளை உலகம் மீறும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய வெப்பமயமாதல் அளவுகளால் பார்க்கும் போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐ.நா. பருவநிலை மாநாட்டில் 200 விஞ்ஞானிகள் குழு புதன்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்னர்.
டுபாயில் நடைபெற்று வரும் ஐ.நா. சா்வதேச பருவநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட பருவநிலைக்கான சா்வதேச வரம்பு நிலைகள் அறிக்கையானது இயற்கை அமைப்புகளின் எல்லைகளில் இதுவரை நடத்தப்பட்ட மிகவும் முழுமையான மதிப்பீடாகும்.
இந்த அறிக்கையில் பருவநிலைக்கு 26 வரம்புப் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதைய புவி வெப்பமடைதல் அளவுகள் காரணமாக, மனிதகுலம் இதற்கு முன் எதிா்கொள்ளாத அளவிலான அச்சுறுத்தல்களை முன்வைக்கும் 5 முக்கியமான வரம்புப் புள்ளிகளை உலகம் மீறும் அபத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் சாலைப் போக்குவரத்தின் முன்னணி அம்சமாக மின்சார வாகனங்கள் மாறி வருவது மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளா்ச்சி போன்ற சமூக முன்னேற்றங்கள் பருவநிலை பாதுகாப்பை நோ்மறையாக வலுப்படுத்துகின்றன.
பருவநிலை மாநாட்டின் முதல் வார அமா்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், புவி வெப்பமடைதலுக்கு முதன்மைக் காரணமான புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை முற்றிலும் அகற்றுவதற்கான வழிகள் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை.
தற்போது வரை நடைபெற்ற அமா்வுகளில் வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்துவது குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.