தொழிலதிபர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பெண்
தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப தராமல் மோசடி செய்த பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
மாகொல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், அந்த பெண்ணுக்கு சொந்தமான சொகுசு கார், பல ஸ்மார்ட் போன்கள் மற்றும் இரண்டு லேப்டாப்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றில் தனது நண்பரின் ஊடாக சந்தேகநபரை அடையாளம் கண்டதாக வர்த்தகர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதாகக் கூறிய குறித்த சந்தேகநபர், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்க அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், குறித்த வர்த்தகரிடம் இந்தத் தொகையை பெற்றுக்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வர்த்தகர் பெண்ணை சந்திக்கவில்லை என பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பெண் பல பாரிய பண மோசடிகள் தொடர்பில் முன்னர் குற்றம் சுமத்தப்பட்ட பெண் என தெரியவந்துள்ளது.
இவருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் மாளிகாகந்த பிரதான நீதவான் நீதிமன்றில் பல பண மோசடி வழக்குகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடம் நீதவான் போல் காட்டிக்கொண்டு 636,000 ரூபா பெற முயன்றதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக போலி கடவுச்சீட்டு தயாரித்தல், காசோலை வழங்குதல் போன்ற பல மோசடிகளில் சந்தேகநபரான பெண் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலத்தில் ஜனாதிபதியுடன் தொடர்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டு பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.