வடகொரிய-ரஷ்ய ராணுவ உறவுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் வடகொரியப் பயணத்துக்கு முன்பாகத் தென்கொரிய வெளியுறவுத் துணையமைச்சர் கிம் ஹோங்-கியுன், அமெரிக்க வெளியுறவுத் துணையமைச்சர் கர்ட் கேம்பெல்லுடன் தொலைபேசி வழியாக அவசரப் பேச்சு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அவ்வாறு தெரிவித்தது.
புட்டினின் பயணத்தால் பியோங்யாங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுப்பெறக்கூடாது என்று குறிப்பிட்ட துணையமைச்சர் கிம், அது ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானத்தை மீறியதாக அமையும் என்பதைச் சுட்டியதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சு கூறியது.
அவ்வாறே கவலை தெரிவித்த துணையமைச்சர் கேம்பெல், வட்டாரத்தில் நிலையற்றதன்மை ஏற்பட்டாலோ அதிபர் புட்டினின் பயணத்தால் சவால்கள் முளைத்தாலோ அவற்றைச் சமாளிக்க அமெரிக்கா தொடர்ந்து தென்கொரியாவுடன் ஒத்துழைக்கும் என்று உறுதியளித்தார்.
அதிபர் புட்டின் அடுத்த சில நாள்களில் வடகொரியா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கடந்த புதன்கிழமை (ஜூன் 12), தென்கொரிய அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
பியோங்யாங் விமான நிலையத்திலிருந்து பொதுமக்களுக்கான விமானங்கள் அகற்றப்பட்டதாகவும் கிம் இல் சுங் சதுக்கத்தில் அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் ‘என்கே புரோ’ இணையத்தளம் கூறியது.
சென்ற ஆண்டு ரஷ்யாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் செர்கி ஷோய்கு பியோங்யாங் சென்றிருந்தபோது கிம்முடன் இணைந்து வடகொரிய அணிவகுப்பைப் பார்வையிட்டது நினைவுகூரத்தக்கது.