காலி பகுதியில் மக்களுக்காக திறக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தலம்!
போர்த்துக்கேயர் மற்றும் டச்சு காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் புதைக்கப்பட்ட காலி கோட்டையின் நிலத்தடி பதுங்கு குழிகளை கண்டறிந்து, அவற்றை பொது கண்காட்சிக்காக திறக்க காலி ஹெரிடேஜ் அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காலி கோட்டை என்பது இலங்கையின் காலி பகுதியில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட கோட்டையாகும். இது பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் டச்சு அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 400 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது.
1988 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ காலி கோட்டை சுவரை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது. தற்போது காலி கோட்டையின் நிர்வாகப் பணிகளைக் கையாளும் காலி ஹெரிடேஜ் அறக்கட்டளையின் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், குறித்த பதுங்குக் குழிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அதை மக்கள் பார்வைக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் கடிகார கோபுரத்தின் அடிவாரத்தில் உள்ள இந்த பதுங்கு குழிக்கு “மூன் வார் அட்டிக்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் அனைத்தும் இப்போது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன, மேலும் காலி ஹெரிடேஜ் அறக்கட்டளையில் டிக்கெட்டை வாங்குவதன் மூலம் இந்த நிலத்தடி பதுங்கு குழிகளைப் பார்வையிடலாம்.