” உலக பொருளாதாரத்துக்கும், மனித இருப்புக்கும் அச்சுறுத்தல்”
யுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காக மிக விரைவில் அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலை உலகப் பொருளாதாரத்திற்கும், மனித வாழ்வின் இருப்புக்கும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் சிறந்ததை எதிர்பார்க்கும் அதேவேளை, மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வாறான நெருக்கடிகளை நீண்டகால அடிப்படையில் எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரிக்கும் அதேவேளை, பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான குறுகிய கால தீர்வுகளையும் அரசாங்கம் தயாரித்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள எரிபொருள் களஞ்சிய வசதிகளுக்கு ஏற்ப, மிகச் சிறந்த எரிபொருள் முகாமைத்துவத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், எரிசக்தித் துறை மற்றும் எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கத்திடம் முறையான திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 47 ஆண்டுகளில் எவ்வித மறுசீரமைப்புக்கும் உள்ளாக்கப்படாத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்ளளவை 100% இனால் அதிகரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேபோல், எரிவாயு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் சுற்றுலா, ஏற்றுமதி, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரித்துள்ள திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விரிவாக விளக்கினார்.




