நியூயாரக்கில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபாதையில் விரைந்த டாக்சி; ஏழு பேர் காயம்
கிறிஸ்துமஸ் தினத்தன்று நியூயார்க்கில் சாலையோரம் இருந்த நடைபாதையில் டாக்சி ஒன்று விரைந்ததை அடுத்து, ஏழு பேர் காயமடைந்தனர்.டாக்சி ஓட்டுநருக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
விடுமுறை காலங்களில் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சுற்றுலாப்பயணிகள், நியூயார்க் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டாக்சி நடைபாதையில் விரைந்ததால் ஒன்பது வயது சிறுவனும் ஐந்து பெண்களும் காயமடைந்ததாக நியூயார்க் காவல்துறை கூறியது.
58 வயது டாக்சி ஓட்டுநரும் காயமடைந்தார்.49 வயது பெண்ணுக்கு காலில் காயம் ஏற்பட்டது.சிறுவனுக்கு வெட்டுக் காயமும் 41 வயது பெண்ணுக்குத் தலையில் காயமும் ஏற்பட்டன.அவர்கள் மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எஞ்சிய மூவர் தங்களுக்கு மருத்துவ உதவி தேவையில்லை என்று கூறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.காயமடைந்தோரில் யாருக்கும் உயிருக்கு ஆபத்தில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
சேதமடைந்த டாக்சியின் படங்களை அமெரிக்க ஊடகங்கள் காட்டின.டாக்சியைச் சுற்றி உடைந்த பாகங்கள் இருந்தன.அதுமட்டுமல்லாது, டாக்சி முழுவதுமாக நொறுங்கியிருந்தது.