இலங்கை வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு வலுவான கல்வி முறைமை அவசியம் – ஜனாதிபதி!
2048 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு வலுவான கல்வி முறைமை மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பிற்கான அமைச்சர்கள் குழுவை ஆதரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேற்படி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டின் மனித வளத்தை சீரமைத்தல், கல்வி முறையை மேம்படுத்துதல், மற்றும் நாட்டை பிராந்திய கல்வி கேந்திர நிலையமாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்களின் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட கல்வி அமைச்சர் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக ஒரு குறிப்பிட்ட மாதத்தை சட்டரீதியாக நிறுவுவதற்கான தனது விருப்பத்தையும் ஜனாதிபதி இதன்போது வெளியிட்டுள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மலேஷியா, சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற வெற்றிகரமான நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட உதாரணங்களின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வலியுறுத்திய ஜனாதிபதி, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும் பல காரணிகளையும் எடுத்துரைத்தார்.
இருப்பினும், சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இணையான உடனடி மாற்றம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, ஒரு கட்ட அணுகுமுறையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், அடுத்த பத்து வருடங்களுக்குள் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலங்கை தன்னியக்கமயமாக்கலைப் பார்க்க வேண்டும் என்றும், இதனால் இலங்கை அதிக தானியங்கி தொழிலாளர் சக்தியைக் கொண்டிருப்பதுடன் இந்த பிராந்தியத்தில் தானியங்கி உற்பத்தி மையமாக மாறும் என்றும் ஜனாதிபதி கூறினார்.