ராஜஸ்தான் மருத்துவமனையில் சினிமாப்பாணியில் அரங்கேறிய வினோத சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அமைந்துள்ள மிகப்பெரிய எம்பிஎஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
வழக்கறிஞர் ஒருவர் சினிமா பட பாணியில், தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மருத்துவமனைக்குள் நுழைந்தார். கருப்பு நிற கோட் அணிந்திருந்த அவர், தனது பைக் வாகனத்தை ஓட்டிக்கொண்டே லிப்டை அடைந்தார். பின்னர் அவர் லிட்டுக்குள் பைக்குடன் உள்ளே நுழைந்தார். பைக்குடன் மூன்றாவது மாடியை அடைந்தார்.
லிப்டுக்குள் இருந்து பைக்குடன் வெளியே வந்த வழக்கறிஞரை பார்த்து, அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அவர்கள் வழக்கறிஞரை தடுத்து நிறுத்த முயன்றனர். இருந்தும் அவர் பைக்கை ஓட்டிக் கொண்டே மருத்துவரின் அறைக்கு சென்றார்.
இதுகுறித்து வழக்கறிஞர் மனோஜ் ஜெயின் கூறுகையில், ‘எனது மகன் லவித்ரா ஜெயினுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தேன். ஆனால் மருத்துவமனை வளாகத்தில் சக்கர நாற்காலி இல்லாததால், எனது மகனை பைக்கை ஏற்றிக்கொண்டு லிப்ட் வழியாக மருத்துவமனையின் எலும்பியல் பிரிவுக்கு அழைத்துச் சென்றேன்’ என்றார்.