அவுஸ்திரேலியாவில் குடியுரிமை கோரி பிரதமர் அலுவலகம் நோக்கி நடைபயணம் செய்யும் இலங்கையர்
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நீல் பாரா என்ற நபர் 1000 கிலோமீற்றர் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அவர் Ballarat இல் இருந்து சிட்னியில் அமைந்துள்ள பிரதமரின் தேர்தல் அலுவலகத்திற்கு செல்லவுள்ளார்.
அவர் தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் ஏறக்குறைய எட்டு வருடங்களாக விசா இல்லாமல் நாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீல் பாரா தனது மனைவி சுகா மற்றும் மூன்று மகள்களுடன் 2012 இல் அவுஸ்திரேலியாவிற்கு பயணம் செய்துள்ளார். உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நீல், 2008ல் மலேசியா சென்றார்.
அதன்பிறகு, 2013-ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் உள்ள Ballarat நகருக்கு குடும்பத்துடன் சென்று தற்காலிக விசா பெற்றுள்ளார்.
இதன்படி, இந்தக் குடும்பம் சுமார் ஒன்பது வருடங்களாக வீட்டு வாடகை செலுத்துதல் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மற்றவர்களிடம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நீல் பாரா தனக்கு மட்டுமின்றி தன்னை போன்று அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.
பிரதமரிடம் கையளிப்பதற்காக 11,500 இற்கும் அதிகமான கையொப்பங்கள் அடங்கிய மனு ஒன்றையும் அவர் எடுத்துச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீல் பாரா தினமும் சுமார் 30 கிலோமீட்டர் பயணம் செய்வதாக கூறப்படுகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் 9ம் திகதி நடைபயணத்தை முடித்துவிட்டு, அதன்பிறகு பிரதமரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளார்.