அவுஸ்திரேலியாவில் உருவாகியுள்ள “பொய்மான்” திரைப்படத்தின் விசேட திரையிடல் யாழ்ப்பாணத்தில்….

வைத்தியர் ஜெயமோகன் இயக்கிய “பொய்மான்” திரைப்படத்தின் விசேட திரையிடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23) மாலை 4.30 மணியளவில் திரைத்துறை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கான விசேட திரையிடல் இடம்பெறவுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொய்மான் திரைப்படம் தொடர்பான விடயங்களை இயக்குனர் ஜே.ஜெயமோகன் தெரிவித்தார்.
நவீன தொழில்நுட்ப உபகரணங்களை இணைத்து அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவாகியுள்ள “பொய்மான்” திரைப்படம், தமிழ்க் கலைஞர்களின் அரியதொரு படைப்பாக எதிர்பார்க்கப்படுவதுடன் இலங்கையிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் தொடர்பாக பேசும் இவ் முழுநீள திரைப்படத்தில் புலம்பெயர் இளங் கலைஞர்களின் படைப்பாற்றலில் ஜனார்தன், கவிஜா, ஜெயமோகன், ஷர்மினி நடித்துள்ளனர்.
புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம், குறும்பட இயக்குனாராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகன் முழுநேர திரைப்பட இயக்குனாராக அறிமுகமாகிறார்.
“பொய்மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இவ்வருடம் ஜனவரி மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.