அமெரிக்காவில் அதிர்ச்சி… கடும் பனிபொழிவால் ஓடுதளத்தில் இருந்து சறுக்கிய விமானம்!
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம் ஒன்று ஓடுதளத்திலிருந்து சறுக்கி புல்வெளியில் நின்ற சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக 50 பயணிகள் உயிர்த்தப்பினர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக ஏராளமான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பல விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நியூயார்க் நகரில் உள்ள பிரடரிக் டக்ளஸ் கிரேட்டர் ரோச்சஸ்டர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 50 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் தரையிறங்கிக் கொண்டிருந்தது. அப்போது கடுமையான பனிப்பொழிவு இருந்ததால், ஓடுதளத்தின் பல்வேறு பகுதிகளிலும் பனி மூடி இருந்தது. ஓடுதளத்தில் பத்திரமாக விமானம் தரையிறங்கிய போதும், விமானத்தை ஓடுதளத்தில் நிறுத்த விமானியால் முடியவில்லை. இதனால் விமானம் அருகில் இருந்த புல்வெளிக்கு சறுக்கிச் சென்று அங்கு நின்றது.
உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு விமானத்தில் இருந்த 50 பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் விமானத்தின் லேண்டிங் கியர் பகுதி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், விமானத்தை பழுது நீக்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் விமான பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.