செம்மணி மனித புதைகுழியில் பொலித்தீனால் கட்டப்பட்ட எலும்புக் குவியல்!

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட – இலங்கையின் மிகப்பெரிய நான்காவது மனித புதைகுழி வளாகத்தின் அகழ்வாய்வு தளத்தின் இரண்டாவது பகுதியில் பொலித்தீனால் சுற்றப்பட்ட மனித எலும்புகளின் ஒரு குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து ஜூலை 10ஆம் திகதியான இன்று வரை அகழந்து எடுக்கப்பட்ட (சிறுவர்கள் உட்பட) மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 65 ஆகும்.
இரண்டாம் கட்ட அகழ்வாய்வு 15 நாட்கள் இடம்பெற்ற பின்னர், அகழ்வாராய்ச்சி குழுவினருக்கு ஓய்வு அளிக்கும் வகையில், இன்றைய தினம் அகழ்வாராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பொலித்தீனில் கட்டப்பட்ட எலும்புகள் அடங்கிய குவியல் தொடர்பில் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவுக்கு நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவினால் உத்தரவிடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிட்டார்.
“அகழ்வுப்பணி பிரதேசம் இரண்டில் ஒரு பொலித்தீனினால் கட்டப்பட்ட எலும்புக் குவியல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தொகுதியில் சிறிய மற்றும் பெரிய எலும்புப்துண்டுகள் காணப்பட்டதால், அந்த எலும்புகள் குறித்து ஆய்வு குறித்த அறிக்கை ஒன்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சடடத்தரணிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்கி, எடுக்கப்பட்ட அந்த எலும்புகளை ஆராய்ந்து ஆகக் குறைந்த மனித உடல்களின் எண்ணிக்கை தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் அறிவித்தார்.”
இதுவரை, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மூன்று இடங்களில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் அந்த இடங்கள் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் 1, 2 மற்றும் 3 என பெயரிடப்பட்டுள்ளன.
மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வாய்வு குறித்த அறிக்கையை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவுக்கு நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா உத்தரவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
நீல நிறப் பை, காலணிகள் மற்றும் சிறு பிள்ளையினுடையது என சந்தேகிக்கப்படும் பல மனித எச்சங்களுடன் கண்டெடுக்கப்பட்ட 25 ஆம் இலக்க மனித எலும்புக்கூடு குறித்த அறிக்கையை ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி, செல்லையா பிரணவனுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதி அமைச்சு 45 நாட்களுக்கு அகழ்வாய்வுக்குத் பணிக்காக கோரப்பட்ட முழுத் தொகையையும் வழங்கியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்த சட்டத்தரணி ரணிதா, அந்தத் தொகையை வெளியிடவில்லை.
அகழ்வாய்வினை தடையின்றித் தொடர போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக உறுதியளித்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் சார்பான சட்டத்தரணி மிராக் ரஹீம், மனித புதைகுழி வளாகத்திற்கு 24 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அகழ்வாய்வுக் குழுவினருக்கு ஓய்வளிக்கும் வகையில் இன்றைய தினம் (ஜூலை 10) தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் ஜூலை 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஊடகங்களிடம் தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பிரிவு மாணவர்களுடன், வைத்தியத்துறை மாணவர்களும் இன்று அகழ்வுப் பணிகளில் பங்கேற்றதாக மேலும் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தால் குற்றம் இடம்பெற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ள செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் தற்போதுள்ள மூன்று சிசிடிவி கமராக்களுடன் மேலதிகமாக இரண்டு சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக அகழ்வாய்வுப் பணிகளை அறிக்கையிட்ட உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.