லூவர் (Louvre) அருங்காட்சியகத்தின் பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி!
பாரிஸில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் பெறுமதிமிக்க நகைகள் களவாடப்பட்டதை தொடர்ந்து அதன் பாதுகாப்பு பொறிமுறைகளை மாற்றியமைப்பது தொடர்பில் இயக்குனர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ் (Laurence des Cars) நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பு மீறல் 232 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தை பல ஆண்டுகளாக பாதித்த சம்பவங்களின் வரிசையில் ஒன்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அருங்காட்சியகத்தில் செயல்படுத்தப்படும் புதிய பாதுகாப்பு கருவி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஊழியர்களுக்கு உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
லூவ்ரின் மைதானத்தில் காவல் நிலையமொன்றை கட்டுவது பெரிய பாதுகாப்பு முன்னேற்றமாக இருக்கும் என்றும் டெஸ் கார்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அருங்காட்சியகம் முழுவதும் புதிதாக 100 பாதுகாப்பு கெமராக்களை பொருத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்குவதுடன், சமீபத்தில் மூடப்பட்ட இரண்டு காட்சியகங்கள் மீண்டும் திறப்பதற்கு முன்பு பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.




