நியூயோர்க்கில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தத்தால் நியூயோர்க் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
புரூக்ளின், மான்ஹாட்டன், ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையம் போன்ற இடங்களில் 15 செமீ வரை மழை பதிவாகி உள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
தொடர் மழை காரணமாக மெட்ரோ ரயில் மற்றும் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் நியூயோர்க் ஆளுநர் Kathy Hochul அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.