80 ஆண்டுகளுக்கு பின் வானில் ஏற்பட்ட அதிசயம் – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
பூமியிலிருந்து 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதொரு வான் நட்சத்திரம் 1946-ஆம் ஆண்டுக்கு பின் இப்போது மீண்டும் தென்பட உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
‘பிளேஸ் ஸ்டார்’, ‘டி கரோனே போரியாலிஸ்’ ஆகிய இரு பெயர்களால் அழைக்கப்படும் இந்த வான் நட்சத்திரம், கடைசியாக 1946-ஆம் ஆண்டு வானில் தென்பட்டது.
இந்த நிலையில், அடுத்த சில நாள்களில் இந்த நட்சத்திரம் எப்போது வேண்டுமானாலும் வானில் தென்படலாம் என்று தெரிவித்துள்ள நாசா விஞ்ஞானிகள், வானில் அதிகபட்சமாக இருவாரங்களுக்கு மட்டுமே தென்படும் இந்த நட்சத்திரத்தை, அதன்பின், 80 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் காண இயலும் என்றும் தெரிவிக்கின்றனர்.
பிளேஸ் ஸ்டார் நட்சத்திரத்தை முதன்முறையாக பார்த்தவராக ஜெர்மனியின் அர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த பர்சர்ட் என்ற நபர் அறியப்படுகிறார். 1217-ஆம் ஆண்டு வானில் இந்த நட்சத்திரம் தென்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பிளேஸ் ஸ்டார் நட்சத்திரத்தை காண்பதென்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக் கிடைக்கும் வாய்ப்பாக விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர்.
நட்சத்திரங்களை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த ‘ஏஏவிஎஸ்ஓ’ அமைப்பு, ‘பிளேஸ் ஸ்டார்’ வானில் எப்போது வேண்டுமானாலும் தென்படும் என்று கடந்தாண்டு அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, ‘பிளேஸ் ஸ்டார்’ நட்சத்திரத்தை செப்டம்பர் மாதம் பார்க்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். இந்த நிலையில், கடந்த காலங்களில் நிகழாமல் தள்ளிப்போயுள்ள இந்த அதிசய நிகழ்வு வரும் வாரங்களில் வானில் ஏற்பட வாய்ப்பு அதிகமுள்ளதாகவே நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.