இந்தியாவில் ரயிலுக்கு அடியில் தொங்கியபடி 290 கிமீ பயணம் செய்த நபர்!

ரயிலின் அடியில் அபாயகரமான முறையில் தொங்கியபடியே பதுங்கியிருந்து நபர் ஒருவர் 290 கிலோமீட்டர் தொலைவிற்குப் பயணம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இட்டார்சியிலிருந்து ஜபல்பூர் சென்ற தானாப்பூர் விரைவு ரயிலில்தான் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், உயிரைப் பணயம் வைத்து, உடலை ஆட்டாமல் அசைக்காமல் ஒரே நிலையில் இருந்தபடி அந்த நபர் பயணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
ரயில் ஜபல்பூர் நிலையத்தை வந்தடைந்ததும் ஊழியர்கள் மேற்கொண்ட வழக்கமான சோதனையின்போது, அந்த நபர் ‘எஸ்4’ பெட்டியின்கீழ் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
விசாரணையில், இட்டார்சி நகரில் அந்த ரயிலில் ஏறியதை அந்த நபர் ஒப்புக்கொண்டார். பயணச்சீட்டு வாங்க தன்னிடம் பணம் இல்லாததால் சக்கரங்களுக்கு இடையில் பதுங்கியபடி செல்லத் துணிந்ததாக அவர் கூறினார்.
தகவலறிந்ததும் அவ்விடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், அவரைப் பிடித்துச் சென்றனர். எந்த முறையில் அவர் ரயிலின் அடியில் தொங்கியபடி வந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.அவர்மீது வழக்கு பதிந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.