இந்தியாவில் தகனம் செய்ய கொண்டு சென்ற போது வழியில் உயிர்த்தெழுந்த நபர்!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நபர் ஒருவர், இறுதிச் சடங்குக்குக் கொண்டுசெல்லப்பட்ட வழியில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டுரங் உல்பே எனும் அந்த 65 வயது நபரைக் கொண்டுசென்ற ஆம்புலன்ஸ், வழியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை மீது மோதியது.அப்போது அவரது கைவிரல்கள் அசையத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
“நாங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தோம். உடனே வாகனத்தைத் திருப்பி அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகு தாத்தாவின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது,” என்று உல்பேயின் பேரன் ஓம்கார் ரமணே ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேட்டிடம் வியாழக்கிழமை (ஜனவரி 2) கூறினார்.சம்பவம் கடந்த டிசம்பர் 16ஆம் திகதி நடந்ததாகத் தெரிகிறது.
வயலிலிருந்து அன்று வீடு திரும்பிய உல்பே, வாந்தி எடுத்ததுடன் உடல்நலம் குன்றியதாக உணர்ந்தார். அவரது மனைவி உதவிகேட்டு அழைத்ததை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகப் பேரன் ரமணே கூறினார்.
உல்பேக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறிய மருத்துவர்கள் மற்றொரு மருத்துவமனைக்கு அவரை அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.பின்னர் தகனம் செய்வதற்காகக் கொண்டுசென்ற வழியில் உல்பே உயிருடன் இருப்பதை உணர்ந்த உறவினர்கள் பெரிய மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்றனர். மோசமான நிலையிலிருந்த உல்பேயை மருத்துவர்கள் போராடிக் குணப்படுத்தினர்.
முதலில் அவர் உயிரிழந்து விட்டதாக கூறிய மருத்துவர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவமனை குறித்து உறவினர்கள் தகவல் கூற மறுத்துவிட்டதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ கூறியது.சிகிச்சை முடிந்து டிசம்பர் 30ஆம் திகதி உல்பே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார்.உறவினர்களின் உற்சாக ஆரவாரத்துக்கிடையே உல்பே தனது வீட்டிற்குள் நடந்து செல்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது