கென்யாவில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள் ஏற்றி சென்ற லொரி; இருவர் பலி, 271 படுகாயம்!
கென்யா தலைநகர் நைரோபி அருகே எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில், 271பேர் காயம் அடைந்துள்ளனர். நைரோபி நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீ மளமளவென பரவி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் ஓரளவிற்கு வளர்ந்த நாடாக கருதப்படும் கென்யாவில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. போதுமான அளவு சாலை வசதிகள் மற்றும் மக்களுக்கு தேவையான எரிவாயு உள்ளிட்டவை முறையாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆப்பிரிக்காவின் பிற நாடுகளை ஒப்பிடும்போது கென்யாவில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் சீராக இருப்பதாக கருத்து நிலவி வருகிறது.
இந்நிலையில் கென்யாவின் தலைநகர் நைரோபி அருகே உள்ள எம்பகாசி பகுதியில், நேற்றிரவு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லொரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென லாரியில் இருந்த ஒரு சிலிண்டர் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில், லொரியில் இருந்த அனைத்து சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்து சிதறத் துவங்கியது. வெடித்து சிதறிய சிலிண்டர்கள் அருகாமையில் உள்ள வீடுகள், கடைகள் மீதும் அங்கிருந்த பொதுமக்கள் மீதும் விழுந்ததால் தீ மளமளவென பரவ துவங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைப்பதற்காக நேற்று இரவு முதல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 271 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்காலிக முகாம்கள் அமைத்து 20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பற்றி எரியும் நெருப்பு அடுத்தடுத்து பரவி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு நிலை வருகிறது.
முதற்கட்டமாக தீ பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு படையினரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆப்பிரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.