இலங்கை: 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை மீண்டும் ஆரம்பிப்பது நவம்பர் 29 ஆம் திகதிக்கு பின்னர் வானிலை மற்றும் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மதிப்பீடு செய்த பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் பாதகமான காலநிலை தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், நவம்பர் 29ஆம் திகதிக்கு பின்னர் மழை வீழ்ச்சி குறையும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
உயர்தரப் பரீட்சையை மீள ஆரம்பிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், வானிலை மற்றும் முக்கியமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வழமைக்கு திரும்பியிருந்தாலோ அல்லது பயணிக்கக்கூடிய நிலைக்குத் திரும்பியிருந்தாலோ உரிய அதிகாரிகள் மதிப்பீடு செய்வார்கள் எனவும் அவர் கூறினார்.
இந்த காரணிகளின் அடிப்படையில் மீண்டும் பரீட்சை தொடங்கும் தேதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அது இறுதி செய்யப்பட்டவுடன் தேவையான விவரங்களை வெளியிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த போதிலும், பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (நவம்பர் 27) தொடக்கம் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.