பிணையில் வெளிவந்த வன்கொடுமை குற்றவாளிகள் நடத்திய ஆடம்பர அணிவகுப்பு – கர்நாடகாவில் பரபரப்பு

இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.விடுதலைக்குப் பிறகு அவர்கள் நடத்திய கார், பைக்குகள் அடங்கிய ஆடம்பர அணிவகுப்பு (ரோடு ஷோ) அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆவேசகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் இளம்பெண் ஒருவரை கும்பல் ஒன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த, 40 வயது நபர் காதலித்து வந்தார்.அவ்விருவரும் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று ஹனகல் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கினர்.இதை அறிந்த கும்பல் ஒன்று ஹோட்டலில் தங்கியிருந்த அப்பெண்ணை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்று அருகில் இருந்த காட்டுப்பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது
இந்தக் கொடூர செயலில் 7 பேர் ஈடுபட்டதாக கூறப்பட்டது.அவ்வழக்கை விசாரித்த கர்நாடக காவல்துறையினர், குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்பட்டது
இதையடுத்து பாதிக்கபட்ட இளம்பெண் நீதிபதி முன்பு பகீர் வாக்குமூலம் அளித்தார்.இதைத்தொடர்ந்து, அவ்வழக்கில், தொடர்புடைய எழுவருடன் சேர்த்து, குற்றவாளிகளுக்கு உதவிய 12 பேர் என மொத்தம் 19 பேரைக் காவல்துறை கைது செய்தது.
இவர்களில் 12 பேருக்கு ஏற்கெனவே பிணை வழங்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளுக்கு மட்டும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது.
இதனிடையே குற்றத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணுவதில் ஏற்பட்ட சிக்கலால், நீதிமன்றம் முக்கிய குற்றவாளிகள் எழுவருக்கு அண்மையில் பிணை கொடுத்தது.
அதன்படி, அஃப்தாப் சந்தனகட்டி, மதார் சாப் மண்டக்கி, சாமிவுல்லா லலனாவர், முகமது சாதிக் அகாசிமானி, ஷோயிப் முல்லா, தௌசிப் சோட்டி, ரியாஸ் சாவிகேரி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்
ஹாவேரியின் அக்கி ஆலூர் நகர சாலைகளில் மகிழ்ச்சி பொங்க அவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் புடை சூழ ஊர்வலம் சென்றுள்ளனர். இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.