கையடக்க தொலைபேசி சார்ஜிங் கேபிளில் மறைந்திருக்கும் ஆபத்து!
தற்போது இமெயில், whatsapp, அலுவலகத் தொடர்புகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என நம்முடைய வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே செல்போன் மாறிவிட்டது. ஆனால் செல்போன் பயன்படுத்துபவர்கள் அதை சார்ஜ் செய்யும் விஷயத்தில் கவனம் காட்டுவதில்லை. தனது செல்போனுக்கு அந்த நிறுவனத்தால் கொடுக்கப்படும் சார்ஜருக்கு பதில், விலை குறைவாகக் கிடைக்கும் தரமற்ற சார்ஜரைப் பயன்படுத்துவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் சார்ஜர் ஒயரை வாயில் வைத்த 8 மாத பெண் குழந்தை இறந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகளான சந்தோஷ்-சஞ்சனா தம்பதிக்கு, சானத்யா என்ற 8 மாத குழந்தை இருந்தது. சந்தோஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று அவர் போனை சார்ஜில் போட்டிருக்கிறார். சில மணி நேரங்களிலேயே அவர் போன் சார்ஜ் ஏறிவிட்டதால் செல்போனை மட்டும் எடுத்துவிட்டு சார்ஜரை ஆப் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டதாகத் தெரிகிறது.
அப்போது அவருடைய மகள் சானித்யா அந்த சார்ஜர் ஒயரை கையில் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுதலாக சார்ஜர் பின்னை வாயில் வைத்ததும், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ந்துபோன பெற்றோர் உடனடியாக குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்களில் சிலர் நினைப்பீர்கள் சார்ஜர், கேபிள் வயர், இணையதள ஒயர்கள் போன்றவற்றில் மின்சாரம் வராது என. ஆனால் அத்தகைய வயர்களிலும் மின்சார சப்ளை இருக்கும். பெரியவர்களாகிய நமக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், சிறு குழந்தைகளுக்கு அந்த மின்சாரம் ஆபத்தானது. எனவே பாதுகாப்பற்ற முறையில் வீட்டிலுள்ள வயர்களை குழந்தைகளை கையாள விடுவதைத் தவிர்த்து எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்.
அதேபோல மின்சாதனங்களை சார்ஜ் ஏற்றியபடியே வீடியோ பார்ப்பது, செல்போனில் பேசுவது, கேம் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இப்படி பயன்படுத்துவதும் ஆபத்தை ஏற்படுத்தும் என செல்போன் நிறுவனங்கள் எச்சரிக்கிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கு இங்கே உள்ளது. எனவே இத்தகைய செயலில் இனி யாரும் ஈடுபட வேண்டாம்.
நன்றி கல்கி