இதயத்தைக் காக்கும் உணவு முறையும் – வழிமுறைகளும்!
மனித உயிர் வாழ்க்கைக்கு இதய இயக்கம் மிகவும் இன்றியமையாதது. இதயம் ஆரோக்கியமாக இயங்க உதவும் பத்து உணவு வகைகளையும், இதய நோய் வராமல் தவிர்க்க உதவும் சில வழிமுறைகளையும் இந்தப் பதிவில் காண்போம்.
ஒருவருக்கு இதய நோய் ஏற்பட்டுள்ளது என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். திடீரென மார்புப் பகுதியில் அசௌகரியம் மற்றும் கனம், அழுத்தும் உணர்வுடன் வலி, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், தீவிர பலவீனம் மற்றும் சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இதயத்தைக் காக்கும் உணவுகள்:
1. சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இதயத்துக்கு பலம் சேர்க்கும் உணவுகளாகும்.
2. பழுப்பு அரிசி, கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் அளவாக உட்கொள்ளவும்.
3. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன் என்றே சொல்லலாம். வேகவைத்த சுண்டல், பயிறு, பருப்பு வகைகள், முட்டையின் வெள்ளைக்கரு நல்லது.
4. தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் லைகோபீன் போன்றவை உள்ளன. இவை இதயத்துக்கு பலம் தருபவை. தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
5. வெண்ணெய், பனீர், பாலாடைக்கட்டி, நெய்யைத் தவிர்த்து விட்டு, கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உட்கொள்ளவும்.
6. சிவப்பு இறைச்சியைத் தவிர்த்து விட்டு தோல் நீக்கிய கோழி மற்றும் மீன்களை பொறிக்காமல் வேகவைத்து உண்ணவும்.
7. உலர் பழங்கள், கொட்டைகள் சாப்பிடலாம். அதிக உப்பு சேர்ந்த பண்டங்களைத் தவிர்த்தல் நலம்.
8. அவகாடோவில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் கரோடினாய்டு ஆகியவை உள்ளதால் இதய பாதிப்பினை இது தடுக்கிறது.
9. கொழுப்பு நீக்கிய மோர், ராகிக் கஞ்சி எடுத்துக்கொள்ளவும்.
10. கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்பு இறைச்சிகளைத் தவிர்க்கவும். பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கவும்.
இதய நோய் வராமல் தவிர்க்க சில வழிமுறைகள்:
1. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
2. புகைப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்துவது மிகவும் முக்கியம்.
3. தவறாமல் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும்.
4. கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும். (கொலஸ்ட்ரால் அளவு 200க்கு கீழ் இருக்க வேண்டும்)
5. நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். மன அழுத்தம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தவும். மௌனம், தியானம், நிதானம் போன்றவை இதயநோய் வராமல் காக்கும்.