இலங்கையில் ஆசிரியர்களாக நடித்து பெற்றோர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கும்பல்
 
																																		இலங்கையில் ஆசிரியர்களாக நடித்து பெற்றோரிடம் இருந்து பணத்தை ஏமாற்றிய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மில்லத்தேவ மற்றும் சுவசக்திபுர பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பண மோசடி தொடர்பான உண்மைகள் தெரியவந்துள்ளன.
கம்பஹா, ஜாஎல, கந்தானை, பமுனுகம, வீரகுல, பூகொட, பேராதனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோரை ஆசிரியர்கள் போன்று பாவனை செய்து ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பெற்றோருக்கு போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தமது பிள்ளைகள் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவசர சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இருவரும் 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போலி தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கும் மோசடி நபர்களிடம் சிக்கவேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
        



 
                         
                            
