மலேசியன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு நபர் மரணம்!
மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கலகத்தில் ஈடுபட்டதற்காக தடுத்துவைக்கப்பட்ட 30 வயது வெளிநாட்டு நபர் ஒருவர் உயிரிழந்தார்.
பிரிட்டனிலிருந்து கோலாலம்பூர் வழியாக தாய்லாந்தின் புக்கெட் தீவுக்குப் பயணம் செய்த அந்த நபர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சனிக்கிழமை (நவம்பர் 23) இருந்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசேன் உமர் கான் தெரிவித்தார்.
“இடைவழிப் பயணத்தின்போது அமளியில் ஈடுபட்ட அவர், மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார். இரு காவல்துறை அதிகாரிகளையும் ஒரு துணைக் காவல்துறை அதிகாரியையும் காயப்படுத்திய பின்னர் அவர் தடுத்துவைக்கப்பட்டார்,” என்று திங்கட்கிழமை (நவம்பர் 25) ஹுசேன் கூறினார்.
கைது நடவடிக்கையின்போது அந்தச் சந்தேக நபர் சுயநினைவை இழந்தார்.
“விமான நிலைய மருத்துவக் குழு அவருக்குச் சிகிச்சை அளித்தது. எனினும், அவர் இறந்துவிட்டதை மருத்துவர் ஒருவர் உறுதி செய்தார்.
“நபரின் சடலம் உடற்கூராய்வுக்காக சுல்தான் இத்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
“வேதியியல் வல்லுநரின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருப்பதால், நபரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை,” என்று ஹுசேன் சொன்னார். இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.