ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த துனிசியாவின் பிரபல பாடகர்
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் பொருளாதார நெருக்கடி உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்த நாட்டின் மிகப் பிரபலமான பாடகர் ஒருவர் சட்டவிரோதமாக இத்தாலியில் புலம்பெயர்ந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.துனிசியாவின் பிரபல சொல்லிசை பாடகரான ஜூனியர் ஹசன் என்பவரே மிக ஆபத்தான படகு யாத்திரையை முன்னெடுத்து இத்தாலியின் சிசிலியில் கடந்த வாரம் புலம்பெயர்ந்துள்ளார்.
ஜூனியர் ஹசனின் பாடல்கள் youtube சேனல் பக்கத்தில் சுமார் 15 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான சோஸ்ஸி பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த குழுவினருடன் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு தெற்கு இத்தாலிய நகரமான பலேர்மோவை அடைந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, புலம்பெயர் மக்களுடன் சிறிய படகு ஒன்றில் பாடகர் ஹசன் காணப்படுவதை காணொளியாக பதிவு செய்து சமூக ஊடக பக்கத்தில் சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால் அந்த காட்சிகள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
துனிசியா நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி, நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு புலம்பெயர வைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், துனிசிய கால்பந்து அணி நிர்வாகம் ஒன்று அதன் 32 வீரர்கள் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்ததை அடுத்து அதன் செயல்பாடுகளை நிறுத்தியது.இதனிடையே, மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல முயலும் ஆப்பிரிக்க புலம்பெயர் மக்களின் முக்கியப் புறப்பாடும் பகுதியாக துனிசியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.