இலங்கை

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் இன்று (21) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

இதன்போது போர் குற்றங்கள் செய்தவர்களை நீதிக்கு முன் நிறுத்து,பாலியல் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்,74 வருட இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும்,இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதி பொறிமுறையை உறுதி செய்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும்,எங்கள் நிலம் எமக்கு வேண்டும். போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் இறுதியில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறையை உறுதிப்படுத்துமாறு கோரிய ஜனநாயக மக்கள் போராட்டம் இன்று 21ம் திகதி வியாழக்கிழமை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான இப்போராட்டமானது திருகோணமலையிலும் இடம்பெற்றது.இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க ஜ.நா சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதி செய்தல் வேண்டும்.

புரட்டாதி மாதம் 21ம் திகதி 2023 ஆகிய இன்றைய நாளில், போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்கள், சிவில் அமைப்புக்கள், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் இப்பிரதேச மனித உரிமை பாதுகாவலர்கள் ஒன்றிணைந்து இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிப்பொறிமுறையை உடனடியாக உறுதிப்படுத்த ஜக்கிய நாடுகள் சபையிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
போர் முடிவுக்கு வந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உண்மையான நீதிப் பொறிமுறையை நிறுவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும், போர்க்குற்றவாளிகளுக்கு பொறுப்புக் கூறி தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவும் இலங்கை அரசின் தரப்பிலிருந்து இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கை அரசாங்கமானது, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை முற்றாக புறக்கணித்ததுடன், அடிப்படை சர்வதேச நியமங்களுக்கு எதிராக செயற்பட்டது.

01. ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு எதிரான மீறல்.
ஜக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை நோக்கங்களை இலங்கை மீறியுள்ளது. மனிதநேயம், மனித கண்ணியம் மற்றும் அனைத்து மனிதர்களுடைய அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க ஜக்கிய நாடுகள் சபை உறுதிபூண்டுள்ளதாக அதனுடைய சாசனம் வெளிப்படையாகக் கூறுகின்றது.
ஐ.நா சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கத் தவறிவிட்டது என்பதை எங்களுடைய அனுபவங்களின் ஊடாகவும் மற்றும் ஐ.நா குழு அறிக்கையில் பொதிந்துள்ள விபரங்கள் ஊடாகவும் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

02. 4வது ஜெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரான மீறல்
1949ம் ஆண்டு மாநாட்டின் “போர் பிரதேசங்களில் சிக்கிய பொது மக்களைப் பாதுகாப்பதாகும்” இந்த மாநாட்டில் சர்வதேச ஆயுத மோதலை பற்றி விவாதித்தாலும், மாநாட்டின் நோக்கம் அனைத்து மோதல் சூழ்நிலைகளுக்கும் பொருத்தமான ஒன்றாகும். அதனை யாரும் மறுக்க முடியாது. ஜெனிவா உடன்படிக்கையின் ஒரு கட்சியான இலங்கை, சிவில் பாதுகாப்பு கோட்பாடுகளையும், மாநாட்டின் அடிப்படை விதிகளையும் இறுதி யுத்த நேரத்தில் மீறியது.

03. இலங்கையின் போர்க் குற்றங்கள்.
அ. ஜ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் படி, இலங்கை அரச படைகள், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் செறிந்து இருந்த பகுதியில் (சூனியபிரதேசம்) கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்தியது மற்றும் பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியது உறுதியாகியுள்ளது. அரச படைகளால் பயன்படுத்தப்பட்ட இரசாயண குண்டுகள், பொதுமக்களுடைய உடல்களில் எரிகாயங்களை உண்டு பண்ணி, இன்றும் மாறாத வடுக்களாக உள்ளன. அத்தோடு இலங்கை அரசபடைகள், இறுதி யுத்த நேரத்தில் கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆ. ஆயிரக்கணக்கான வடகிழக்கு தமிழ் மக்கள் இன்றும் தங்களது உடலில் குண்டுச் சிதறல்களோடும், தோட்டாக்களோடும் வாழ்கின்றனர். பல கைக்குழந்தைகள் இறுதி யுத்தத்தில் காயமடைந்து, இன்றும் தங்களது உடல்களில் உலோக துண்டுகளோடு வாழ்கின்றனர். ஒரு கர்ப்பிணித்தாயின் வயிறு உலோகத் துண்டுகளால் துளைக்கப்பட்டு, அவளது வயிற்றில் இருந்த குழந்தையும் அந்த குண்டுத் துண்டுகளால் காயமடைந்து, இன்றும் அந்தக் குழந்தை காய வடுக்களோடும் தழும்புகளோடும் வாழ்கின்றது.

இ. மருத்துவமனைகள் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு கப்பல் மூலம் மாற்றப்பட்ட காயமுற்றோர் மற்றும் நோயுற்றோர் நிரந்தரமாக காணாமல் ஆக்கப்பட்டனர். பொதுமக்கள் யுத்த பிரதேசத்திலிருந்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, முட்கம்பி வேலிகள் சூழப்பட்ட முகாம்களில் வவுனியாவில் அடைக்கப்பட்டனர். இரவும் பகலும் ஆயுதப்படைகளின் பலத்த பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்தனர். பல குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட தங்களுடைய சொந்தங்களை பார்வையிடவும், மருத்துவமனைகளில் உயிரிழந்த உறவுகளின் உடல்களை பார்வையிடவும் அவர்களுக்கான இறுதி மரியாதையை செய்யவும் அனுமதிகள் முற்றாக மறுக்கப்பட்டன.

ஈ. அரச படைகளால் கைது செய்யப்பட்டவர்கள் (சந்தேகத்தின் அடிப்படையில்) அரச படைகளிடம் உயிர் பாதுகாப்புக் கருதி சரணடைந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களால் அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை அவர்களது நிலைமை பற்றி எந்தவிதமான தகவல்களும் இல்லை.

உ. ஆண்களும், பெண்களும் திரையிட்டு மறைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். பெண்கள் திரையிடப்பட்டு மறைக்கப்பட்ட சூழ்நிலையில் ஆண் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தனர். இது அடிப்படை மனித கண்ணியத்தை மீறிய செயலாகும்.

ஊ. வெவ்வேறு சூழ்நிலைகளில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டன.

பொதுக் கட்டடங்கள் உட்பட பொதுமக்களின் பெரும்பாலான வீடுகள் அரச படைகளின் குண்டுத் தாக்குதலினால் முற்றாக அழிக்கப்பட்டன. பொதுமக்களின் எஞ்சிய சொத்துக்கள் உடமைகள் அரச படைகளாலும், கூலிப்படைகளாலும் சூரையாடப்பட்டன. வீட்டினுள் கதவுகள் யன்னல்கள் உடமைகள் ஆகியன இவ்வாறு பயன்பாட்டுக்காக அகற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டன ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கைகளின்படி போரின் இறுதிக்கட்டத்தில் 40000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் அரச படைகளினால் கொல்லப்பட்டனர். அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளின்போது பெண்னின் உள்ளாடைகள், விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் இலக்கத்தகடுகளோடு மனித எச்சங்கள் போன்றன தோண்டி எடுக்கப்பட்டன.

ஐக்கியநாடுகள் சபை அனைத்து மக்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க உறுதிபூண்ட அமைப்பாகும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பது ஐக்கிய நாடு சபையினுடைய முதன்மைப் பொறுப்பாகும் எனவே போர்க்குற்றங்களை விசாரிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கவும் சர்வதேச நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொள்கின்றோம்.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்