உலக மக்கள்தொகையில் சுமார் பாதி பேருக்கு காத்திருக்கும் ஆபத்து
உலக மக்கள்தொகையில் சுமார் பாதி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம் இது தொடர்பில் எச்சரித்துள்ளதுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு உலகெங்கும் டெங்கு காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
டெங்கு தொடர்பான தகவலுக்கும் உதவிக்குமான கோரிக்கைகள், கடந்த ஆண்டின் முற்பாதியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் சுமார் 15 சதவீதம் கூடின.
International SOS எனும் சுகாதார, பாதுகாப்புச் சேவைகள் நிறுவனம் அந்தத் தகவல்களை வெளியிட்டது. வேலையிடங்களில் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான யோசனைகளை அது வழங்கியுள்ளது.
வெளிநாடு செல்லும் ஊழியர்கள் டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் நிறுவனம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
பயணத்துக்கு முன்னதாக, அவர்கள் செல்லும் நாடுகளில் ஊழியர்கள் டெங்கிக் காய்ச்சல் குறித்த விவரங்களையும் சுகாதாரப் பரமாரிப்பு ஆலோசனைகளையும் எப்படிப் பெறலாம் என்பது பற்றித் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
பூச்சித் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தவும் ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்பான உடைகள், குளிர்சாதன வசதி கொண்ட அறை, கொசுக்களிடமிருந்து பாதுகாப்பதற்கான திரைகள் போன்ற அம்சங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அதிக அபாயமிக்க இடங்களில் உள்ள நிறுவனங்கள் கொசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும்.
அடிக்கடி வேலையிடங்களைச் சோதனை செய்யவேண்டும். டெங்கிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் தடுப்பு நடவடிக்கைகள், அறிகுறிகள் பற்றிக் கூடுதல் தகவல் பெறவும் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.