இந்தியாவில் ஆற்றுக்குள் பாய்ந்த கார்… கூகுள் மேப்பால் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம்!
கேரளாவில் கூகுள் மேப் பார்த்து ஓட்டிச் செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கார், குருப்பந்தரா அருகே ஆற்றுக்குள் இறங்கி, மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து ஒரு பெண் உள்பட 4 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலாவுக்கு காரில் கேரளா வந்தனர். இவர்கள் நேற்று இரவு ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த சாலை, கனமழை காரணமாக வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. அப்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு வழி தெரியாததால், கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்றனர்.
குருப்பந்தாரா பகுதியில் சென்றபோது, தவறுதலாக வழி மாறி, கார் அப்பகுதியில் உள்ள ஆற்றுக்குள் இறங்கி மூழ்கியது. இதையடுத்து அப்பகுதியினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 4 பேரும் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் வந்த கார் நீரில் மூழ்கி விட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காடுதுருத்தி காவல் நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது நீரில் மூழ்கிய காரை வெளியே எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.