தாய்லாந்தில் முற்றாக தீப்பிடித்து எரிந்த பேருந்து : சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு வெளியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த மூன்று ஆசிரியர்கள் உள்பட 16 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் மேலும் 22 பேரின் நிலை குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் குறித்த பேருந்தில் இருந்து 10 சடலங்கள் மீட்கப்பட்டதாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
தீயினால் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணமான உதய் தானியில் பள்ளிக்கு சுற்றுலா சென்று திரும்பும்போதே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போக்குவரத்து அமைச்சர் சூர்யாஹே ஜுவாங்ரூங்ரூங்கிட் கூறுகையில், இந்த பேருந்து அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.