மத்திய பிரதேசத்தில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!
மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் ஆட்டிறைச்சி சந்தை உள்ளது. இதனால் அந்த பகுதியை சுற்றிலும் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளன. இந் நிலையில் சம்பவத்தன்று சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சிறுவனை சுற்றி வளைத்த தெருநாய்கள் பயங்கரமாக தாக்கியுள்ளன.
அப்போது விரைந்து வந்த சிறுவனின் பாட்டி, நாய்களின் பிடியில் இருந்து சிறுவனை விடுவித்தார். ஆனால் அதற்குள் சிறுவன் பலத்த காயமடைந்தான். இதையடுத்து உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் சி.இ.ஓ. குஷால் சிங் துத்வே, “நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெருநாய்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவற்றைப் பிடிப்பது சற்று கடினம். நாய்களை பிடிக்கும் போது, நாய் பிரியர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.