நியூசிலாந்தில் 19 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி
நியூசிலாந்தின் ஒக்லாந்து கடற்கரையில் அண்மையில் காணாமல் போன இலங்கை இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஹிரன் ஜோசப் என்ற 19 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி ஒக்லாந்தில் உள்ள கரோட்டா கடற்கரையில் அவர் காணாமல் போயிருந்தார்.
தனது மூத்த சகோதரர் மற்றும் நண்பருடன் நீராடும்போது ஹிரன் காணாமல் போனார். அவரது சகோதரரும் நண்பரும் கரைக்குத் திரும்பினர், எனினும் ஜோசப் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாமில்டன் கேப்பில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஹிரன் ஜோசப் சிறந்த நீச்சல் வீரர் என்றாலும், அலைகளை எதிர்த்து அவரால் போராட முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட பலத்த கடல் நீரோட்டம் காரணமாக ஹிரன் அலையில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த இரண்டாம் திகதி கடல் சீற்றமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 90 பேர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.