போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி: பஞ்சாப் அரசு அறிவிப்பு
கடந்த 21ம் திகதி விவசாயிகள் போராட்டத்தின் போது பலியான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு பஞ்சாப் அரசு அறிவித்த ரூ.1 கோடியை வேண்டாம் என நிராகரித்த குடும்பத்தினர், தங்களுக்கு நீதிதான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் கனௌரி எல்லையில், புதன்கிழமை மாலை நடந்த விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இன்று காலை அறிவித்திருந்தார்.
ஆனால், ரூ.1 கோடி நிவாரண நிதி தங்களது குடும்பத்துக்குத் தேவையில்லை என்றும், எங்கள் குழந்தையின் மரணத்துக்கு நீதிதான் வேண்டும், அவனுக்கு பதிலாக பணமோ, அரசு வேலையோ ஈடாக முடியாது என்று கூறியுள்ளனர்.
மேலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை, விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங்கின் உடலை கூறாய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துவிட்டனர்.
முன்னதாக, ஹிசார் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹரியாணா விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தின் போது பலியான சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிவாரண நிதியும், அவரது இளைய சகோதரிக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார்.
இந்தியாவில் பல விவசாய சங்கங்கள் பிப்ரவரி 13 முதல் தங்கள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் இதர கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.