காங்கிரஸ் எம்பி-யான சசி தரூருக்கு செவாலியே விருது… பிரான்ஸ் அரசு பெருமிதம்!
காங்கிரஸ் எம்பி-யான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி-யான சசி தரூர், ‘இந்தியாவின் இருண்ட காலம்’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது வழங்க பிரான்ஸ் அரசு முடிவு செய்தது. இதன்படி 2022ம் ஆண்டு இந்த விருதை பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தது. இந்திய-பிரான்ஸ் உறவுகளை ஆழப்படுத்த சசிதரூர் எடுத்துக்கொண்ட அயராத முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், சர்வதேச அமைதி மற்றும் ஒத்துழைப்பிற்கான அர்ப்பணிப்பு மற்றும் பிரான்சின் நீண்ட கால நண்பராக இருந்ததற்காக இந்த உயரிய விருதை இவருக்கு வழங்குவதாக பிரான்ஸ் அறிவித்தது.
இந்த நிலையில், பிரான்ஸ் செனட் தலைவர் லார்ச்சர், சசி தரூருக்கு இந்த விருதை இன்று டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வைத்து வழங்கினார். அப்போது பேசிய லார்ச்சர், ”டாக்டர் தரூர், பிரான்சின் உண்மையான நண்பர். பிரான்ஸ் மற்றும் அதன் கலாசாரம் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவர். இந்த விருதின் மூலம் உங்கள் சாதனைகள், உங்கள் நட்பு, பிரான்ஸ் மீதான உங்கள் அன்பு, ஆகியவற்றை பிரான்ஸ் குடியரசு அங்கீகரிக்கிறது” என்று கூறினார்.
விருதைப் பெற்றுக் கொண்டு பேசிய சசி தரூர், ”செவாலியே விருதை ஏற்றுக் கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். பிரான்ஸ், அதன் மக்கள், அவர்களின் மொழி மற்றும் கலாசாரம், குறிப்பாக அவர்களின் இலக்கிய மற்றும் சினிமாவை போற்றும் ஒருவர் என்ற முறையில் உங்கள் நாட்டின் உயரிய விருதை நான் மிகவும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த விருது ஒரு இந்தியருக்கு வழங்கப்பட்டிருப்பது, பிரான்ஸ்-இந்தியா இடையேயான ஆழமான மற்றும் நீண்ட காலமாக நீடிக்கும் உறவுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம்” என்றார்.