இலங்கை வைத்தியசாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்!
சுகாதார ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 1100 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியசாலைகளின் 72 சுகாதார சங்கங்கள் நேற்று (13.02) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இரண்டாவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டமையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனின் பணிப்புரையின் பேரில் இப் படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தளபதிகளின் பூரண மேற்பார்வையில், கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டி, மஹ்மோதர, பேராதனை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள் மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை, மாத்தளை, பொலன்னறுவை, மெதிரிகிரிய , ஹிகுராக்கொட, மட்டக்களப்பு, தெஹியத்தகண்டி., ஹம்பாந்தோட்டை, தெபரவெவ, இரத்தினபுரி, பலாங்கொடை, அஹெலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, எல்பிட்டிய, ஹோமாகம மற்றும் கேகாலை உட்பட 64 வைத்தியசாலைகள் தங்குதடையின்றி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளாந்த செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி வழமையாகப் பேணுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், எதிர்காலத்தில் ஏற்படும் தேவைகளின் அடிப்படையில் இராணுவத்தினரை ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்கு தயாராக இருக்குமாறும் இராணுவத் தளபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 188 வீரர்களும், கடற்படையைச் சேர்ந்த 93 வீரர்களும் வைத்தியசாலை சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.