பாக். பிரதமராகவுள்ள நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் … PPP கட்சி வெளியிலிருந்து ஆதரவு!
PML-N கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்க, PPP கட்சி முடிவு செய்துள்ள நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வாக உள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 8-ம் திகதி நடைபெற்றது. அன்று மாலை முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 336 இடங்களில் 266 இடங்களில் நேரடி தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (PTI) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர். PML-N கட்சி 75 இடங்களிலும், PPP கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
MQM-P கட்சி 17 இடங்களையும், சிறிய கட்சிகளான ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் (JUI) 4 இடங்களையும், பிஎம்எல்-குவைத் 3 இடங்களையும், இஸ்தெகாம்-இ-பாகிஸ்தான் கட்சி (IPP), பலூசிஸ்தான் தேசிய கட்சி (PNP) தலா 2 இடங்களையும் வென்றன.
ஆட்சி அமைக்க மொத்தம் 169 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில், நியமன இடங்களான 70 இடங்கள் பெண்கள், சிறுபான்மையினருக்கு கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் அடிப்படையில் இறுதியில் பெரும்பான்மையை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.
இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி புதிய அரசில் அங்கம் வகிக்காமல், PML-N கட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்தே தற்போது பிஎம்எல்-என் ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘PML-N தலைவர் நவாஸ் ஷெரீப் (74), தனது இளைய சகோதரர் ஷெபாஸ் ஷெரீப்பை (72), பிரதமர் பதவிக்கும், தனது மகள் மரியம் நவாஸை (50), பஞ்சாப் மாகாண முதலமைச்சராகவும் பரிந்துரைத்துள்ளார். புதிய அரசை அமைக்க, PML-N கட்சிக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார். இதுபோன்ற முடிவுகளின் மூலம் பாகிஸ்தான் நெருக்கடிகளிலிருந்து வெளியே வரும் என் நம்பிக்கை தெரிவித்துள்ளார்’
தேர்தல் நடந்து சுமார் ஒரு வாரம் எட்டியுள்ள நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கான சூழல் கணிந்துள்ளது