கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட விராட் கோலி!
Fab 4 என்பது சர்வதேச கிரிக்கெட் அளவில் சிறந்த 4 பேட்ஸ்மேன்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இந்த Fab 4 ல் இப்போது விராட் கோலி கடைசிக்கு சென்றுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
இந்த Fab 4 என்ற சொல்லை முதன்முதலில் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் க்ரோ தான் அறிமுகப்படுத்தினார். பின்னர் அதனை கிரிக்கெட் ரசிகர்களும் அதிகமாகப் பயன்படுத்த தொடங்கினார்கள். அந்தவகையில் இந்த Fab 4 ல் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உள்ளனர்.
முன்னணி வீரர்கள், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விட டெஸ்ட் தொடர்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
நியூசிலாந்து வீரரான கேன் வில்லியம்சன் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து இரண்டு சதங்களை விளாசியுள்ளார். அந்தவகையில் 97 டெஸ்ட் போட்டிகளில் கலந்துக்கொண்ட கேன் 31 சதங்களை விளாசியுள்ளார். இந்த தொடர் சதங்களால் கேன் வில்லியம்சன் Fab 4ல் முதல் இடத்திற்கு வந்துள்ளார். 107 போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 32 சதங்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதேபோல் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 137 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்கள் விளாசியிருக்கிறார். இவர்கள் மூவருமே 30 சதங்களைத் தொட்டுவிட்டனர். ஆனால் விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளில் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 2 சதங்களே அடித்துள்ளார். ஆகையால் விராட் கோலி Fab 4 பேட்ஸ்மேன்களில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி இதுவரை பங்குகொள்ளவில்லை. இனி நடைபெறும் போட்டிகளில் விளையாடுவதிலும் சந்தேகம்தான். இதனால் டெஸ்ட் போட்டிகளில் விராட் சதம் அடிப்பதற்கான வாய்ப்பு இப்போது இல்லை என்றே கருதப்படுகிறது.
இனியும் சதங்கள் எடுக்க தாமதமானால் விராட் கோலி Fab 4ல் இருந்தே வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.