நாம் பேசப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் நியூரான்கள்!
மூளையில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் மேம்பட்ட பதிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மனித மூளையில் நியூரான்கள் சார்ந்த உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட நியூரான்கள் குறித்த ஆய்வு முடிவு, மூளையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள புதிய பரிணாமத்தைத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலமாக நியூரான்களின் நுண்ணறிவு எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதைப் புரிந்துகெள்ள முடிகிறது. இந்த புதிய கண்டுபிடிப்புபால், மனிதர்களின் மொழி உற்பத்தி, பேச்சுக் கோளாறு போன்றவற்றைப் புரிந்துகொண்டு அதற்கு சிகிச்சை அளிக்க வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.
நம்மில் பலருக்கு, பேசுவது தானே அது மிகவும் சுலபமானது எனத் தோன்றினாலும், ஒருவர் பேசும்போது தேர்வு செய்யும் வார்த்தைகள், சொல்ல விரும்பும் விஷயங்கள், உச்சரிப்பு, இயக்கம் மற்றும் நமது பேச்சின் நோக்கத்தை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்களை மூளை செய்கிறது. இந்த ஆகச்சிறந்த விஷயத்தை மூளை சாதாரணமாக கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடிக்கிறது. இயற்கையாக ஒருவர் பேசும்போது வினாடிக்கு மூன்று வார்த்தைகள் வரை பேச முடியும். அதில் சிலருக்கு குறிப்பிட்ட பிழைகள் இருக்கலாம். இருப்பினும் இப்படி பேசுவது நம்மால் எப்படி முடிகிறது என்பது ஒரு மர்மமாகவே உள்ளது.
இதைக் கண்டறிவதற்கு நியூரோபிக்சல் ஆய்வு எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நம்முடைய மொழி உற்பத்திக்கு பங்களிக்கும் நியூரான்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமாக மூளையில் நாம் பேசுவதற்கும், கேட்பதற்கும் தனித்தனியாக நியூரான்களின் குழுக்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆய்வில் நியூரான்கள் நாம் பேசுவதற்கு முன்பாகவே சில அடிப்படை கூறுகளைப் பயன்படுத்தி நாம் பேச விரும்புவதை பேசுவதற்கு முன்பாகவே தெரிந்து கொண்டு, பேச்சு ஒலியாக மாற்றுவதை இந்த ஆய்வு நிரூபித்தது. இப்படி நாம் நினைப்பதை முன்கூட்டியே நியூரான்கள் பதிவு செய்வதன் மூலம், நமது வாயிலிருந்து வார்த்தை வருவதற்கு முன்பே நியூரான்களுக்கு அது தெரிந்துவிடுவதை ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொண்டனர்.
இந்த ஆய்வு முடிவு மூளை பற்றிய புரிதலில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் ஆய்வு செய்து நியூரான்களைப் பற்றி புரிந்துகொள்ள ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.