ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறிய தகவல்
தற்போதைய ஜனாதிபதியை விட ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியான ஒருவர் தமது கட்சியில் இருப்பின் அவருக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே பொருத்தமானது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் தமது கட்சியில் அவ்வாறானவர் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் கட்சியை விட நாட்டைப் பற்றி சிந்தித்து சவால்களை எதிர்கொள்ளக்கூடிய எதிர்காலம் கொண்ட தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
அதற்கான அதிகூடிய தகுதிகள் தற்போதைய ஜனாதிபதிக்கு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மினுவாங்கொட கனேஹிமுல்ல பிரதேச குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இதேவேளை, பாரம்பரிய கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பலபிட்டிய ரேவத தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.