போரில் குழந்தைகளை இழந்தும் குறையாத நெஞ்சுரம்… பாலஸ்தீன செய்தியாளரை கௌரவப்படுத்தவுள்ள கேரளா மீடியா அக்காடமி !
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் தனது இரண்டு குழந்தைகளை இழந்த பின்னும் களத்தில் நின்ற செய்தியாளருக்கு சிறந்த பத்திரிகையாளருக்கான விருது வழங்கி கேரளா அரசு கௌரவிக்க உள்ளது.
காசா பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் அரசு முழு வீச்சில் போரைத் துவங்கி நடத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடரும் குண்டு வீச்சு சம்பவங்களால் இதுவரை 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
காசாவில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தியிருந்தாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். இந்த போர் துவங்கியதில் இருந்தே ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை உலகிற்கு எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் காசா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் வைல் அல் தஹ்துத், தொடக்கம் முதலே நெஞ்சுரத்தோடு போர் தொடர்பான தகவல்களை அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கி வருகிறார்.
இந்தப் போரில் தஹ்துத்தின் மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட அவரது உறவினர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்த போதும் களத்தில் இருந்து செய்திகளை வெளியிடுவதில் இருந்து பின் வாங்காமல் தஹ்துத் தொடர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஏவுகணை தாக்குதலின் போது இவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். உடனே அவரிடம் இருந்து கீழே விழுந்த கேமராவை எடுத்து, அந்த சம்பவத்தை தஹ்துத் உலகிற்கு தெரியப்படுத்தினார்.
இதில் அவர் படுகாயம் அடைந்ததை அடுத்து தற்போது கத்தாரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகும் மீண்டும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இவரது தியாகத்தை போற்றும் விதமாக பல்வேறு செய்தியாளர் சங்கங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேரளா மீடியா அகாடமி வருடம்தோறும் வழங்கப்படும் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது இந்த ஆண்டு தஹ்துத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை முதலமைச்சர் பினராயி விஜயன் வழங்குவார் எனவும், இந்த விருது மற்றும் பதக்கத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் தஹ்துத்திற்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.