பாகிஸ்தான் தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு சம்பவம்..
பாகிஸ்தானில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே வருகிற 8ம் திகதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேர்தல் களை கட்டி உள்ளது. இதனிடையே அவ்வப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது இதனால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்த சூழலில் கராச்சி மாநகரில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ள பகுதியில் இன்று திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பை ஒன்றை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர் குப்பையில் வீசியதாக தெரியவந்தது. குப்பையில் கிடந்த நெகிழிப்பை திடீரென இன்று பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த வெடிகுண்டை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் வைத்து சென்ற மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவேளை வெடிகுண்டு கட்டிடத்திற்குள்ளேயே வைத்திருந்தால் பெரிய அளவில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்திலேயே நிகழ்த்தப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பாகிஸ்தான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.