நேற்றைய தீர்ப்பில் 10 ஆண்டுகள்,இன்றைய நீதிமன்ற தீர்ப்பில் 14 ஆண்டு சிறை- கேள்விக்குறியான இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை
அரசு ரகசியங்களை கசிய விட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்றைய 10 ஆண்டு சிறைத் தண்டனை தீர்ப்பை அடுத்து, பரிசுப் பொருள் ஊழல் தொடர்பான வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு 14 ஆண்டு சிறை தண்டனையை இம்ரான் கானுக்கு உறுதி செய்திருக்கிறது. இதனால் இம்ரான் கான் மற்றும் அவரது அரசியலின் எதிர்காலம் பாகிஸ்தானில் கேள்விக்குள்ளாகி உள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு, தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கையில் அடுத்தடுத்து வெளியாகும் நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புகளால் இம்ரான் கானின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்றைய தினம், அரசு ரகசியங்களை கசியவிட்டது தொடர்பான வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை தீர்ப்பு வெளியாகி பாகிஸ்தானை பரபரப்பில் ஆழ்த்தியது. இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அமெரிக்க தூதரகம் வாயிலாகப் பெறப்பட்ட ரகசியங்களை பகிரங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார். அப்படி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு ஆளானார்கள்.
கடந்த 2022-ல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார். அடுத்து ஆட்சியமைத்த நவாஸ் ஷெரீப்பின் ’பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- நவாஸ்’ ஆட்சிக்கு எதிராக இம்ரான் கான் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார். மக்கள் மத்தியிலான கிளர்ச்சி அதிகரித்ததில், இம்ரான்கான் மீதான வழக்குகள் தூசு தட்டப்பட்டன. நூற்றுக்கும் மேலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற மேல்முறையீட்டில் ஒரு வழக்கின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டாலும், அடுத்த வழக்கில் அவரது கைது மற்றும் சிறைவாசம் தொடர்ந்தது.
அந்த வகையில் நேற்றைய, அரசு ரகசியங்களை கசியவிட்டது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பை அடுத்து, பரிசுப்பொருள் ஊழல் வழக்கில் 14 ஆண்டு சிறைக்கு இம்ரான் கான் இன்று தீர்ப்பாகி இருக்கிறார். இன்றைய தீர்ப்பில் இம்ரான் கான் மனைவியான புஷ்ரா பிபி-யும் 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இத்துடன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ787 மில்லியன் தொகையை தலா இருவரும் அபராதமாக கட்டுமாறும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசியல் பொதுவாழ்க்கையில் ஈடுபட இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகளிலும் மேல் முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், அதனால் எந்தவித பலனும் இன்றி இம்ரான் கான் சிறையில் முடங்கியிருக்கிறார்.