மேற்கு ஆபிரிக்க நாடு ஒன்றிற்கு 25,000 டன் கோதுமையை பரிசளித்த விளாடிமிர் புடின்
மேற்கு ஆப்ரிக்க நாடு ஒன்றிற்கு 25,000 டன் கோதுமையை ரஷ்யா அரசாங்கம் இலவசமாகவே அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை குறித்த தகவலை உறுதி செய்துள்ள அமைச்சர் ஒருவர், ஒப்பிட முடியாத பரிசு என நெகிழ்ந்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோ கடந்த 2022ல் இருமுறை ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்கொண்ட பின்னர் ரஷ்யா உடனான உறவை பலப்படுத்திக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் புர்கினா பாசோவில் தங்கள் தூதரகத்தை ரஷ்யா மீண்டும் திறந்துள்ளது. சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னர் மூடப்பட்ட ரஷ்ய தூதரகம் 2023 டிசம்பரில் தான் திறக்கப்பட்டுள்ளது.
புர்கினா பாசோவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கால் பகுதியினர் வளர்ச்சி குன்றியவர்கள் என ஐ.நா அமைப்பால் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர்.மட்டுமின்றி, பல ஆண்டுகளாக இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளை புர்கினா பாசோ எதிர்கொண்டு வருகிறது. இதனால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே, ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை பொதுமக்களில் பலர் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க ராணுவ ஆட்சியால் முடியவில்லை என்றே கூறப்படுகிறது.மேலும், நாட்டின் பெரும் பகுதியை இஸ்லாமிய பயங்கரவாதிகளே கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலையிலேயே கடந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த உச்சிமாநாட்டின் போது, ஜனாதிபதி விளாடிமிர் புடின், புர்கினா பாசோவுக்கு ஆயிரக்கணக்கான டன் கோதுமையை பரிசாக அனுப்புவதாக உறுதியளித்தார்.
தற்போது 25,000 டன் கோதுமையை ரஷ்யா அரசாங்கம் இலவசமாகவே அளித்துள்ளது. இதனால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை நம்பியிருந்த புர்கினோ பாசோ தற்போது ரஷ்யா பக்கம் திரும்பியுள்ளது.