இந்தியப் பெருங்கடலில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தும் இந்தியா மற்றும் பிரான்ஸ்!
தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்த இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் இந்திய வருகையைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளின் தலைவர்களும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அவர்களின் பொதுவான பார்வையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் மீண்டும் வலியுறுத்தினர்.
அத்துடன் அந்தந்த இறையாண்மை மற்றும் மூலோபாய நலன்களுக்கான பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதுடன், சுதந்திரமான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் அமைதியான இந்தோ-பசிபிக் மற்றும் அதற்கு அப்பால் முன்னேற்றத்திற்கான பிராந்தியத்தில் தங்கள் கூட்டாண்மையின் முக்கிய பங்கையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.