ராமர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு; கர்நாடகாவின் கலபுராகியில் 144 தடை உத்தரவு!
கர்நாடகாவின் கலபுராகி மாவட்டத்தில் ராமர் சிலை ஊர்வலத்தில் தகராறைத் தொடர்ந்து இன்று அம்பேத்கர் சிலை அவமதிப்பு பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா நாடு முழுவதும் ராம பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, கர்நாடக மாநிலம், கலபுராகி மாவட்டத்தில் ராமர் சிலை நேற்று ஊர்வலம் நடத்தப்பட்டது.
அப்போது, இரு குழுவினரிடையே திடீரென தகராறு ஏற்பட்டு கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பவலிஸார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.இது தொடர்பாக கலபுராகி மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ராமர் சிலை ஊர்வலத்தில் திடீரென தகராறு ஏற்பட்டு, கடும் வாக்குவாதமானது. நிலைமை தீவிரமானதால் காவல் துறையினர் தலையிட்டு, பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் காவல் துறையினர் அணிவகுப்பு நடத்தினர்.
இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சித்தாப்பூர் வட்டத்தின் வாடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 25ம் திகதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும்” என்றார்.இதற்கிடையே, கலபுராகி புறநகரில் மற்றொரு பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள கோட்னூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது விஷமிகள் நேற்று மாலை செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்ததாகவும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு தலித் அமைப்பினர், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பில் கூறுகையில், “குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சிக்கிறோம். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.ராமர் சிலை ஊர்வலத்தில் இரு குழுக்களிடையே தகராறு, அம்பேத்கர் சிலை அவமதிப்பு ஆகிய சம்பவங்களால் கலபுராகியில் பதற்றம் நிலவுகிறது.